முத்துப்பேட்டை, நவ. 13: திருவாரூர; மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த அம்மலூர் அருகே எடையூர் மற்றும் ஓவரர் கிராமத்தை இணைக்கும் வகையில் இரு பகுதி கிராமங்களின் வசதிக்காக அவ்வழியே செல்லும் பழம்பாண்டி ஆற்றில் பாலம் கட்டி இணைப்பு சாலை அமைக்க தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ரூ. 7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் துவங்கியது. இந்த பாலம் பணிகளுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு வர ஆற்றின் மணல் கொட்டி சாலை அமைக்கப்பட்டது. தற்போது பாலத்தின் கட்டுமான பணிகளில் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது மற்ற பணிகள் காலதாமதமாக நடந்து வருவதால் ஆற்றில் கொட்டப்பட்ட மணல் சாலை தற்போது ஆற்றில் செல்லும் நீரோட்டத்தை தடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த பழம்பாண்டி ஆறு என்பது இப்பகுதியை சுற்றியுள்ள் கிராமங்களின் வடிகாலாக பயன்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் செல்லும் நீர் பாண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரைக்காகோரையாற்றில் கலந்து வடிந்து வருகிறது. தற்போது தண்ணீர் வடிய வழியின்றி உள்ளதால் எடையூர், குமாரபுரம், வடசங்கேந்தி, கரணகொடை, கடுவெளி, ஆரியலூர், மாங்குடி, மருதவனம் மற்றுமின்றி தேவதானம் வரையில் உள்ள கிராமங்களில் மழை நீர் வடிய வழியின்றி சாகுபடி வயலில் சிறு மழை பெய்தால் கூட தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதனால் இந்த ஆற்றில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ள மணல் திட்டை அகற்ற வேண்டும் அல்லது ஒரு பகுதியில் உள்ள மணல் திட்டையாவது அகற்றி நீரை வடிய வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர் ஆனாலும் இதுவரை மணல் திட்டை அகற்றாததால் நீர் வடியாமல் தேங்கிக்கிடக்கிறது. தற்போது கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அப்படி கனமழை பெய்து ஆற்றில் அதிகளவில் நீர் வரும் பட்சத்தில் சுற்று பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. அதனால் உடனடியாக இந்த பழம்பாண்டி ஆற்றில் நீரோட்டத்தை தடுத்து வரும் மணல் திட்டை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.