முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை தீபாவளி பண்டிகை வரை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, வட்டாட்சியரிடம் வியாபாரிகள் நேற்று மனு அளித்தனர். முத்துப்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 17, 18ம் தேதிகளில் அகற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வியாபாரிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்பதால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தீபாவளிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டும் என முத்துப்பேட்டையில் உள்ள வர்த்தகக்கழகத்தினர் வட்டாட்சியர் மகேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், ‘‘வியாபாரிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுதான் மீண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு அகற்றினால் தீபாவளி வியாபாரம் பெரியளவில் பாதிக்கப்படும். எனவே, வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தீபாவளி பண்டிகை வரை ஒத்திவைத்து அதன் பிறகு மேற்கொள்ள வேண்டுகிறோம்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.