நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள இறைச்சிக் கடைகளில் முத்திரையின்றி பயன்படுத்திய 14 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் தொழிலாளர் உதவி ஆனையர் திருநந்தன் தலைமையில், ராசிபுரம் மற்றும் நாமக்கல் பகுதி தொழிலாளர் துறை அதிகாரிகள் இணைந்து சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாய்க்கன்பட்டியில் செயல்படும் இறைச்சிக்கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, சிக்கன், மட்டன், இறைச்சி மற்றும் மீன் கடைகளில், சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ், பயன்படுத்தப்படும் தராசுகளில் எடை குறைவு, முத்திரை மற்றும் மறு முத்திரை இடப்படாத எடையளவு பயன்படுத்துதல், தரமில்லாத எடையளவுகள், கடைகளில் மறுபரிசீலனை சான்று வெளிக்காட்டி வைக்காமல் இருத்தல், சோதனை எடைக்கற்கள் வைக்காமல் இருத்தல் போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
மொத்தம் 13 இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, முத்திரை மற்றும் மறு முத்திரை இடாமல் பயன்படுத்திய 11 எலக்ட்ரானிக் தராசுகள்,3 மேஜை தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தராசுகள் மற்றும் அனைத்து எடை அளவுகளையும் உரிய நேரத்தில், முத்திரை, மறு முத்திரை இடமால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வணிகர்களுக்கு ₹5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வணிகர்கள் இதுவரை முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்தி வந்தால், உடனடியாக அற்றை தொழிலாளர் துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று உரிய கட்டணம் செலுத்தி முத்திரையிட்டுக் கொள்ளவேண்டும். மேலும் மறுமுத்திரை சான்றிதழை கடைகளில் நன்கு தெரியுமாறு வெளிக்காட்டி வைக்க வேண்டும் என தொழிலாளர் துறை உதவி ஆனைைையர் திருநந்தன் தெரிவித்துள்ளார்.