மானாமதுரை, ஆக.11: மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமம் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த ஊருக்கு மேற்கு பக்கமாக பெரும்பச்சேரி, மேட்டுமடை, கொம்புக்காரனேந்தல், சவேரியார்பட்டினம், கட்டிககுளம் கிராமங்களும். கிழக்கு பகுதியில் இடைக்காட்டூர், அருளானந்தபுரம், பதினெட்டாங்கோட்டை, சிறுகுடி, கள்ளர்குளம் உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன.
சுற்றிலும் உள்ள பத்து கிராமங்களிலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு இடைக்காட்டூரில் உள்ள வங்கி மூலம் பணபரிவர்த்தனை நடக்கிறது. அவசர தேவைகளுக்கு பணம் எடுக்கவேண்டும் என்றால், அவர்கள் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள மானாமதுரைக்கு வரவேண்டியுள்ளது. இதுதவிர மதுரை ராமேஸ்வரம் இடையே செல்லம் சுற்றுலா பயணிகள் கடைகளில் உணவு, குடிநீர் பாட்டில்கள் வாங்கவோ பணம் எடுக்க ஏடிஎம் இல்லாததால் வெளியூர் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
முத்தனேந்தல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், மணி ஆகியோர் கூறுகையில், ‘‘முத்தனேந்தலை மையமாக கொண்ட பத்து கிராமங்களில் இருந்து காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க இங்கு வருகின்றனர். இதுதவிர முதியோர் உதவிக்தொகை, அரசு ஒய்வூதியம் பெறுபவர்கள் என மூத்த குடிமக்கள் மானாமதுரைக்கு ஆட்டோ, கார்,பஸ்சில் சென்று பணம் எடுக்க வேண்டியுள்ளது. மேலும் ராமேஸ்வரம், மதுரை மார்க்கமாக சுற்றுலா வரும் வெளியூர் பயணிகள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே முத்தனேந்தல் பகுதியில் தேசிய வங்கியின் ஏடிஎம் கிளையை திறக்க முன்னோடி வங்கி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.