ஊட்டி: முதுமலை புலிகள் காப்பக உள்மண்டல பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்குகிறது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கடமான்கள், புள்ளி மான்கள், பன்றிகள் உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு ஒருமுறையும், பருவமழைக்கு முந்தைய மற்றும் பின்பும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுகிறது. 321 சதுர கி.மீ., பரப்பளவுள்ள உள்மண்டலம் பகுதியில் அமைந்துள்ள தெப்பகாடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி ஆகிய 5 வனச்சரகங்களில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் படி பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. தெப்பகாடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று கணக்கெடுப்பில் பங்கேற்கும் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று காலை முதல் கணக்கெடுப்பு பணிகள் துவங்குகிறது.