ஊட்டி, மே 10: முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன்பும், பருவ மழைக்கு பின்னரும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் 367 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மசினகுடி வெளி மண்டலத்தில் உள்ள சீகூர், சிங்காரா மற்றும் நீலகிரி கிழக்கு சரகம் ஆகிய வனச்சரகங்களில் தாவர உண்ணி மற்றும் ஊன் உண்ணி விலங்குகள் மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு குறித்த கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது.
இக்கணக்கெடுப்பு பணியின்போது 34 நேர் கோடுகளில் நேரடி மற்றும் மறைமுக தடயங்கள் மூலம் ஊன் உண்ணிகளின் வாழ்விட பயன்பாடு, அடையாள அளவை கணக்கெடுத்தல், தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு, தாவர உண்ணிகளின் வாழ்விட வகை மதிப்பீடு செய்தல் மற்றும் பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை போன்றவை குறித்தும், யானை – சாணமுறை கணக்கெடுப்பு, மனித இடையூறுகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இக்கணக்கெடுப்பு பணி வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.
பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
பந்தலூர்,மே10: பந்தலூர் அருகே மேங்கொரேஞ் பகுதியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளின் கார் ஒன்று, நேற்று காலை பந்தலூர் நோக்கி வரும்போது மேங்கொரேஞ் பகுதியில் சாலையோரத்தில் உள்ள தேயிலைத்தோட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். விபத்தில் சிக்கியவர்களை அக்கப்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரித்து வருகின்றனர்.