வேலூர், செப். 12: வேலூர் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் 204 மாணவர்கள் சேர்க்கை நேற்று நடந்தது. 36 காலியிடங்கள் உள்ளது. வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இளநிலை படிப்புகளில் நடந்து முடிந்த நிலையில், முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 8ம் தேதி நடந்தது. முதுகலை பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பப்படிவம் மற்றும் உறுதிமொழி படிவங்கள், இளநிலை படிப்பின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தொகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்று, வருமான சான்று, வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றின் உண்மை சான்றிதழ்கள், இவற்றின் 2 நகல்களுடன் பங்கேற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்தது.
தொடர்ந்து முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார். மாணவர் சேர்க்கை குழு உறுப்பினர்களும் பேராசிரியர்களுமான பத்மினி, கீதா, ரவி ஆகியோர் முன்னிலையில் 240 காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. இதில், சிறப்பு ஒதுக்கீடாக என்சிசி -1, விளையாட்டு பிரிவு – 2, முன்னாள் ராணுவத்தினர்- 3, என்று மொத்தம் 6 சிறப்பு ஒதுக்கீடு உட்பட 204 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. மேலும் 36 இடங்கள் காலியாக உள்ளது. கலந்தாய்வில் சேர்ந்த 204 மாணவர்களுக்கு 13ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்தார்.