சாயல்குடி, மே 28: முதுகுளத்தூர் பேரூராட்சி கடை ஏலம் நிர்வாக காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலைய பகுதியில் மொத்தம் 59 கடைகள் உள்ளன. இதில் பஸ் நிலையம் உள் கிழக்கு பகுதியில் உள்ள தரைத்தளம் 12 கடைகளுக்கு நேற்று ஏலம் விடப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து 24 பேர் முன் வைப்பு தொகைக்கு வங்கி வரைவு காசோலையை கட்டி ஏலத்தில் பங்கேற்க பெயர் முன் பதிவு செய்தனர்.
முன்னதாக பஸ் நிலைய வளாக கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள், ஏலத்தில் முன்னாள் கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். சிலர் ஒளிவு மறைவின்றி முறையாக வெளிப்படையாக ஏலம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இரு தரப்பினரும் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் சிம்ரன் ஜீத் காலோனிடம் மனு அளித்தனர்.
ஆனால் ஏலம் பொதுவானது என்பதால் முன்னுரிமை வழங்கவில்லை. இதனால் ஆட்சேபனை தெரிவித்து வியாபாரிகள் சிலர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிர்வாக காரணத்தால் நேற்று நடக்க இருந்த ஏலம் மற்றும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் அறிவித்தார். இந்த ஏலம் மற்றும் கடையடைப்பால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.