சாயல்குடி, ஆக.28: முதுகுளத்தூர் பகுதியில் கடும் வறட்சியிலும் விளைவிக்கப்பட்ட கீரைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் மழை காலங்களில் நெல், மிளகாய் பிரதான பயிராகவும், மல்லி, சிறுதானியம் வகை பயிர்களும், கோடையில் பருத்தியும் பயிரிடுவது வழக்கம். இதற்கிடையே மரங்கள் நிறைந்த பகுதியில் குறைந்தளவில் கீரையும் சாகுபடி செய்யப்படுகிறது. முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டணம், கருமல், எஸ்.ஆர்.என்.பழங்குளம், குமாரக்குறிச்சி, கீழச்சிறுபோது உள்ளிட்ட கிராம பகுதிகளில் கீரை விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் ஓரளவு லாபம் தரக்கூடிய அரைக்கீரை, தண்டங்கீரைகளை பயிரிட்டனர், போர்வெல் மூலம் கிடைக்கக் கூடிய சவறு தண்ணீரை பாய்ச்சியதால் கீரை நன்றாக வளர்ந்தது. இதனால் களையை அகற்றுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல், உரம் போடுதல். சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்த செடிகளை காப்பாற்ற சில இடங்களில் டிராக்டர்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி, கூலி ஆட்கள் மூலம் செடி தூர்களில் தெளித்து வந்தனர். இதனால் கடும் வறட்சியிலும், விலைக்கு தண்ணீர் வாங்கி ஊற்றி காப்பாற்றப்பட்ட கீரை கட்டுகள் ரூ.10க்கும் குறைவாக விலை போகிறது. இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் நஷ்டமானதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.