ஆரணி, ஆக.18: ஆரணி அருகே வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம், முதியோர் இல்லம் நடத்துவதாக தம்பதி நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் மோகனன் தெருவை சேர்ந்தவர் கணேஷ்(45). ஆரணியில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா. முதியோர் இல்லத்தில் நிர்வாகியாக உள்ளார். அர்ச்சனாவிற்கு சொந்தமான வீடு சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இபி நகரில் உள்ளது. இந்த வீட்டை அடமானம் வைத்து கடந்த 2014ம் ஆண்டு வங்கியில் ₹19.50 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால், அதன்பிறகு வட்டி மற்றும் கடனை திருப்பி செலுத்தவில்லையாம். எனவே, வங்கி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த மாதம் 25ம் தேதி அர்ச்சனாவின் வீட்டிற்கு சீல் வைத்து, வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆணையாளர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, ஆணையாளர் மணிவண்ணன், அரசு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், வங்கி அதிகாரபூர்வ அவலுவலர் முத்துமணி மற்றும் வங்கி அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைக்க இபி நகரில் உள்ள அர்ச்சனா வீட்டிற்கு சென்றனர்.
அப்போது, கணேஷ், அவரது மனைவி அர்ச்சனா ஆகிய இருவரும், இந்த வீட்டில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறோம். எனவே, வீட்டிற்கு சீல் வைக்க விடமாட்டோம் என கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீட்டிற்கு சீல் வைக்க உள்ளதை முன்பே தெரிந்து கொண்ட கணேஷ், இதனை தடுக்கும் வகையில் அவர் ஏற்கனவே நடத்தி வரும் முதியோர் இல்லத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட முதியோர்களை இந்த வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளதாக தெரிகிறது. இதை பார்த்த ஆணையாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் உடனே ஆர்டிஓ தனலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தாசில்தார் மஞ்சுளா, ஆர்ஐ அசோக்குமார், விஏஓ புருஷோத்தமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வீட்டில் தங்க வைத்திருந்த முதியோர்களை உடனே மீட்டு வேறு காப்பகம் அல்லது இல்லத்திற்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.
இதற்கு கணேஷ், அர்ச்சனா இருவரும் முதியோர்களை அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்ஐ ஷாபுதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், அந்த முதியோர்களை காப்பகத்திற்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது, தாசில்தார் நீதிமன்றம் உத்தரவின்படி தான் வீட்டிற்கு சீல் வைக்கப்படுகிறது. நீங்கள் இருவரும் உங்கள் சொத்தை பாதுகாப்பதற்காக முதியோர்களை வைத்து நாடகமாட வேண்டாம். எந்த அடிப்படை வசதியும் இல்லாத வீட்டில் முதியோர்களை வைத்து அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவிட்டு சென்றார். இதையடுத்து, நேற்று காலை அந்த முதியோர்களை கணேஷ் தம்பதி ஆரணியில் உள்ள தங்களது முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். பின்னர், நேற்று மாலை போலீசார் பாதுகாப்புடன் அந்த வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பூட்டி சீல் வைத்து வங்கி அதிகாரிகளிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் முதியோர் இல்லம் நடத்துவதாக தம்பதி நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.