பள்ளிகொண்டா, செப்.4: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டிகேஎஸ் நகரை சேர்ந்தவர் பிரபு பாலன்(42). இவருக்கு வெட்டுவாணம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில், உள்ள தென்னை மரங்களை குத்தகைவிடுவதற்காக நேற்று நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கிணற்று ஷெட் அருகே பாறையின் மீது அடையாளம் தெரியாத ஆண் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பிரபு பாலன் பள்ளிகொண்டா காவல்நிலையத்திற்கு கொடுத்த தகவலின்பேரில், அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இறந்த நபருக்கு 65 வயது இருக்கும் என தெரிகிறது. அவர் வெள்ளைநிற வேட்டியும், பச்சை நிற டி-சர்ட்டும் அணிந்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சடலமாக மீட்கப்பட்டவர் எந்த ஊரைச்சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.