திருவண்ணாமலை, ஜூலை 29: திருவண்ணாமலையில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்ற முதியவரின் கவனத்தை திசை திருப்பி, மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை தேவ கோபுரம் தெருவை சேர்ந்தவர் சற்குணம்(60). திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்மில், நேற்று முன்தினம் அவரது சேமிப்பு கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டு பயன்படுத்தி பணத்தை எடுக்க முயன்றார். அப்போது, அவரது ஏடிஎம் கார்டு இயந்திரத்தில் லாக் ஆகி செயல்பாட்டில் இருந்தது. ஆனால், ஏடிஎம் கார்டு சிக்கிக்கொண்டதாக அவர் பதற்றம் அடைந்தார். அதனை கண்ட ஒரு நபர், செக்யூரிட்டியை உதவிக்கு அழைக்குமாறு கவனத்தை திருப்பினார். அந்த இடைவெளியில், முதியவரின் ஏடிஎம் கார்டை வெளியே எடுத்துவிட்டு, போலி ஏடிஎம் கார்டை அதில் நுழைத்துவிட்டு வெளியேறினார். மேலும், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ₹20 ஆயிரத்தை எடுத்துள்ளார். இந்த மோசடி தெரிந்து அதிர்ச்சி அடைந்த முதியவர் சற்குணம், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வாலிபரை தேடி வருகின்றனர்.