பவானி,ஜூன்3: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். ஈரோடு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், பெருந்துறையில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு பவானி, அம்மாபேட்டை வழியாகச் செல்வதால், பவானி – மேட்டூர் வழித்தடத்தில் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் வரையில் சாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்ட எல்லையில் பெரும்பள்ளத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் அம்மாபேட்டை போலீசார் மற்றும் சேலம் மாவட்ட போலீசாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பவானி டிஎஸ்பி ரத்னகுமார், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, அந்தியூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, மேட்டூர் எஸ்.ஐ. பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.