காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க இணையதள முன்பதிவு தொடங்கியுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக, 2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளன.
மேலும், மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ₹1 லட்சமும், இரண்டாம் பரிசாக ₹75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ₹50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ₹75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ₹50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ₹25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளன. இவ்வாண்டு, தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.
இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரைவுள்ள கல்லூரி மாணக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தர பணியாளர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை http://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம். போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.8.2024 ஆகும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும், விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலோ (அ) 95140 00777 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.