நாமக்கல், ஆக.26: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்ய 2ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு முதல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ₹25கோடி ஆகும். மேலும், ₹50.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53வகைகளில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறுகின்றன.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை, இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக ₹1லட்சம், 2ம் பரிசாக ₹75ஆயிரம், 3ம் பரிசாக ₹50ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசாக தலா ₹75ஆயிரம், 2ம் பரிசாக தலா ₹50ஆயிரம், 3ம் பரிசாக தலா ₹25ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது. தனிநபர், குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 4ம் இடம் பெற்றவருக்கும், 3ம் இடத்துக்கு இணையாக பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. தனிநபர், குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ₹37கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகளை பெற முடியும். தமிழகம் முழுவதும் 12 முதல் 19வயது வரையிலான பள்ளி மாணவர்கள், 17 முதல் 25வயது வரையிலான கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35வயது வரையிலான பொதுப்பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்ள முன்பதிவு வரும் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். 95140-00777 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.