மயிலாடுதுறை,ஆக.30: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு பேட்டி சிறந்த முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
2024-2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் எதிர்வரும் செப்டம்பர்-2024 மற்றும் அக்டோபர் 2024 மாதங்களில் நடத்தப்படவுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயதுவரை) மாவட்ட அளவில் நடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம்,கோ-கோஆகிய 15 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், மண்டல மற்றும் மாநில அளவில் கடற்கரை கையுந்துபந்து, டென்னிஸ், பளுதூக்குதல், வான்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளும், நேரடியாக மாநில அளவில் டிராக் சைக்கிளிங் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு (17 முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம் ஆகிய 14 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல மற்றும் மாநில அளவில் கடற்கரை கையுந்துபந்து,டென்னிஸ், பளுதூக்குதல், வாள்சண்டை, ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய போட்டிகளும், நேரடியாக மாநில அளவில் டிராக் சைக்கிளிங், ஸ்குவாஷ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிக்கான (வயது வரம்பு இல்லை) விளையாட்டுப் போட்டிகள் மாவட்டமற்றும் மாநிலஅளவில் தடகளம், இறகுபந்து, வீல்சேர் டென்னிஸ், அடாப்டட் வாலிபால், ஏறிபந்து, கபடிமற்றும் கால்பந்து ஆகிய 7 வகையான போட்டிகளும், பொதுமக்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கான (15 முதல் 35 வயதுவரை) விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், இறகுபந்து, கிரிக்கெட், கபடி, கையுந்துபந்து, கால்பந்து, கேரம், சிலம்பம் ஆகிய 8 வகையான போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், இறகுபந்து, சதுரங்கம், கபடி, கையுந்து பந்து மற்றும் கேரம் ஆகிய 6 வகையான போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் முன் வந்து உடனடியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் எதிர்வரும் 2.9.2024-தேதிக்குள் தங்களது விவரங்களை பதிவேற்றும் செய்திட வேண்டும். மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடந்துவதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், காவல் துறையினர் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்களைகளை முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும். விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு பதிவு செய்வது தொடர்பாக முன்கூட்டியே பள்ளி, கல்லூரிகளுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் விளையாட்டு சங்கங்கள் அவர் அவர்கள் விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் வீரர், வீராங்களைகளை கலந்து கொள்ள செய்திடவும். மாவட்ட அளவிலான போட்டிகளிலும் சிறந்த முறையில் நடத்திடவும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், டிஆர்ஓ மணிமேகலை, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துவடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.