கரூர், ஆக. 30: கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக பெயர்களை முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
2024-25ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது.
12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வயதுவரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கால அவகாசம் செப்டம்பர் 2ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஆர்வம் உள்ள அனைவரும் < https://sdat.tn.gov.in > என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. (மேலும், இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும்.
நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது). மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703493ல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.