Wednesday, May 31, 2023
Home » முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: மே 23 வரை விண்ணப்பிக்கலாம்

முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: மே 23 வரை விண்ணப்பிக்கலாம்

by Karthik Yash

திருவள்ளூர், மே 19: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி (ரங்கம்) மற்றும் திருநெல்வேலியிலும் செயல்பட்டு வருகிறது. மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோட்டிலும், மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் மாவட்டம் சத்தூவச்சாரியிலும் செயல்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதி ஈரோடு திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில், விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையட்டு வீரராக விளங்குவதற்கு 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 24ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கங்களில் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கான தேர்வு போட்டிகள் பின்வரும் விளையாட்டுகளில் நடைபெறுகிறது. அதன்படி தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளு தூக்குதல் ஆகிய போட்டிகள் நடைபெறும். அதே போல் மாணவியர்களுக்கான தேர்வுப் போட்டிகள் கீழ்கண்ட விளையாட்டுக்களில் நடைபெறும். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், வில்வித்தை, பளு தூக்குதல், மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை வருகிற 23ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய செல்போன் எண் 9514000777 அல்லது திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பிரேம்குமாரை 7401703482 என்ற எண்ணில் அல்லது அலுவலகத்தை 044 – 27666249 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24ம் தேதி காலை 7 மணியளவில் மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டரங்கத்தில் நடத்தப்பட இருப்பதால் தவறாமல் மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ள வேண்டும், என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi