திருச்சி, மே 31: திருச்சி மாவட்டம் முசிறி வட்டாரம் பெரமங்கலத்தில் மண்வள அட்டையை பயன்படுத்தி உர மேலாண்மை மேற்கொள்வது குறித்து, அட்மா திட்டத்தின் கீழ், ‘உழவர் திறல் பரவலாக்குதல்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பயிற்சிக்கு முசிறி வேளா ண்மை உதவி இயக்குநர் சுகுமார் தலைமை வகித்தார். பயிற்சியில் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியா் ஜானகி, ‘க்ரஷ் சங்கல்ப அபியான்’ திட்டத்தின் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய விதை ரகங்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முசிறி வேளாண்மை அலுவலர் பிரியங்கா மத்திய மற்றும் மாநிலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண் விற்பனைத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் ராதா கிருஷ்ணன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் மண்வள அட்டையை பயன்படுத்தி சத்து மேலாண்மை மேற்கொள்வது குறித்த, விழிப்புணர்வு நடைபயணம் (பேரணி) மேற்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் சுரேஷ், சரண்யா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.