பாப்பாக்குடி,அக்.26: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாக்குடி ஊராட்சியில் 12-வார்டுகள் உள்ளன. இதில், பா.இலந்தைகுளம், ஓ.துலுக்கப்பட்டி, குமாரசாமியாபுரம், பொன்நகர் உள்பட 6 வார்டு பகுதிகளை உள்ளடக்கி ஓ.துலுக்கப்பட்டி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சியாக அமைக்கக்கோரி கடந்த இரண்டு முறை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஓ.துலுக்கப்பட்டி பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை. எனவே இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்களோடு சேர்ந்து நேற்று ஓ.துலுக்கப்பட்டி கிராமத்தில் இருந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஓ.துலுக்கப்பட்டி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.