‘‘மாஜி அமைச்சரின் இல்லத் திருமண விழாவில் கூட்டத்தை காட்டி தேனிக்காரர் அணிக்கு செக் வைக்க சேலத்துக்காரர் முடிவு பண்ணியிருக்காராமே..’’ என்று ேகட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர் ஆதரவாளரான மாஜி அமைச்சரின் இல்ல திருமண நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் மனுநீதி சோழன் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில், சேலத்துக்காரருக்கு மாஜி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளாராம்… இதே போல் டெல்டா மாவட்டத்தில் மாஜி அமைச்சர்கள், நிர்வாகிகளையும் அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான வேலையில் மாஜி அமைச்சர் தற்போது அவரது ஆதரவாளர்களுடன் தீவிரமாக இறங்கியுள்ளாராம்… இலை கட்சியில் சேலத்துக்காரர் நடத்திய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கடலோர, மனுநீதி சோழன், நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் தன்னுடைய பலத்தை காண்பிக்க வேண்டும் என சேலத்துக்காரர் திட்டமிட்டுள்ளாராம். திருமண விழாவில் நிர்வாகிகள், தொண்டர்கள் என அதிகளவு கூட்டத்தை காட்டி தேனிக்காரர் அணியை கலங்க அடிக்க வேண்டும் என மாஜி அமைச்சருக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளாராம். திருமண விழாவில் கூட்டத்தை காட்டி இதன் மூலம் தேனிக்காரர் அணிக்கு செக் வைக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகளுக்குள் பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘முக்கிய தலைகளுக்கு குறிவச்சிருக்காராமே சேலம் விஐபி..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் சேலத்துக்காரர் புது அவதாரம் எடுக்கப்போறதா கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்காம். இந்த கட்சிக்காக எப்படியெல்லாம் உழைத்தேன். நான் யாரிடமும் சிபாரிசு கேட்கவில்லை. அடிமட்டத்தில் இருந்து உழைத்து உழைத்து இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கேன்னு சேலத்து மாஜி பெருமையா சொல்லிக்கிட்டிருக்காராம். அதே நேரத்தில் கூட இருக்கும் முதற்கட்ட தலைகளின் பவர்களை அடக்கவும் பட்டியல் தயாரிச்சிருக்காராம் மாஜி. சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததில் இருந்தே அவரது பவரை அதிகரிச்சிருக்காராம். இவரது முதற்கட்ட பட்டியலில் மாவட்டத்தை பிரிக்கவிடாமல் மிரட்டி எம்பி பதவி வாங்கியவர், தொண்டரிடமே சீட்டுக்காக பல லகரங்களை கேட்டவர், தனக்கு தெரியாமலேயே ஒன்றிய மலராத கட்சியுடன் தொடர்பு வைத்திருக்கும் கொங்குக்காரர் என அவரது பட்டியல் நீண்டுக்கிட்டே போகுதாம். முதற்கட்ட லிஸ்டில் 10 பெரும் தலைகள் வாராங்களாம். இலைக்கட்சியின் முழு பவரும் தன்னிடம் வந்தவுடன் இவர்களின் றெக்கையை வெட்டி விடுவதற்கு தயாரா இருக்காராம். மம்மியை கண்டால் ஹெலிகாப்டருக்கு வணக்கம் போட்டது போல கும்பிடணும் என்பது அவரது எண்ணமாம். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அவரது அடிப்பொடிகள் சொல்றாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா நகரத்து மேட்டர் என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘எங்களுக்கும் தெரியும் ஸ்டண்ட்… என புறப்பட்ட அல்வா நகரத்து எம்எல்ஏவை தெரியுமா… தாமரை கட்சியை சேர்ந்த இவர், நகரின் செல்லப்பிள்ளை என்ற பெயரோடு இலையில் இருந்து வெளியேறி தாமரையில் ஐக்கியமாகி சீட் பெற்று வெற்றி பெற்றவர். ஆனால் சமீபகாலமாக அவரது கட்சியினரே எங்க எம்எல்ஏவை காணவில்லை என்று புலம்பி வருகின்றனர். நெல்லை நகரின் வீதிகளை நினைத்து விதியை நொந்து கொள்ளும் மக்களே எம்எல்ஏ மீது கோபமாக இருக்கின்றனராம். இதனால் எம்பி தேர்தலில் ஓட்டுக்கேட்டு போகக்கூட முடியாதே என கட்சியினர் புலம்பினர். இதையறிந்த எம்எல்ஏ, எங்களுக்கும் தெரியும் ஸ்டண்ட் என ஆதரவாளர்களிடம் அங்கலாயித்தாராம். தொகுதி மேம்பாட்டு நிதியில் நடக்கும் பணிகளை பார்வையிடுகிறேன் என புறப்பட்ட அவர், ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வையிட்டு படம் காட்டியுள்ளாராம். ெதாகுதியில் உள்ள ஒரு பெரியகுளம் வறண்டு பயிர்கள் எல்லாம் காய்ந்து கிடப்பதை பார்வையிட்டு அல்வா மாவட்டத்தையே வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனவும் வளர்ச்சி பணிகள் விரைவுபடுத்தப்படாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி கட்சியினரை சற்று ஆப் செய்து வைத்துள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பெண் அதிகாரி காட்டில் வசூல் மழை கொட்டுதாமே…’’‘‘நாகர்கோவில் மாவட்ட பத்திரபதிவு அலுவலகத்தில், தணிக்கை பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். தற்போது, இவரது கட்டுப்பாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் தினசரி ரூ.10 லட்சம் வரை வசூல்செய்து தர கேட்டு தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை டார்ச்சர் செய்கிறாராம். இதற்கு துணையாக மேலாளரான பெண் அதிகாரி இருப்பதால், மேலாளரான அதிகாரி அலுவலகத்திற்கே மதியத்திற்கு மேல் தான் பணிக்கு வருகிறாராம். இதனால், நேர்மையான ஊழியர்கள், சார்பதிவாளர்கள் கதறி வருகின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி அமைச்சர் எரிச்சல்பட்டது ஏன்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகரின் புறநகர் இலைக்கட்சி மாஜி அமைச்சர் ஏற்பாட்டில் சமீபத்தில் நடந்த திருமண விழாவிற்கு, சேலத்துக்காரர் வந்திருந்தார். அந்த நேரத்தில் பொதுக்குழு செல்லுமென தீர்ப்பு வந்ததும், சேலத்துக்காரர் உற்சாக வெள்ளத்தில் மிதந்தார். மேலும், இந்த விழா ரொம்பவே சென்டிமென்ட் என புறநகர் மாஜி அமைச்சரை பாராட்டி தள்ளி விட்டாராம். இது அருகே இருந்த நகர் மாஜி அமைச்சருக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டதாம். வேறு வழியில்லாமல் கடைசிவரை உடனிருந்ததாகவும், கட்சிக்காக கடுமையாக உழைத்தும், இக்கட்டான சூழலில், தலைமைக்கு கட்டுப்பட்டு, தொண்டர்களை அரவணைத்துச் சென்ற தனக்கு உரிய பலன் கிடைக்கவில்லையே என ஆதரவாளர்களிடம் புலம்பி தள்ளியுள்ளார். இது ஒருபுறமிருக்க இலைக்கட்சியின் எம்எல்ஏவான செல்லமானவரும் மனத்தாங்கலோடு உள்ளார். ஏற்கனவே கொடியேற்று விழாவில் சேலத்துக்காரர், கிண்டல் செய்து பேசியதால் சங்கடத்தில் இருந்தார். தற்போது திருமண விழாவிலும், அவரை சேலத்துக்காரர் பெரியதாக கண்டு கொள்ளவில்லையாம். தூங்கா நகரின் இலைக்கட்சியின் 3 முக்கிய தலைகளுக்குள் இந்த பிரச்னை விரைவில் தலைமையிடம் வெடிக்குமென தொண்டர்கள் பரபரப்பாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா….