மதுரை, செப்.20: மதுரை மாநகரில் 13 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளும் பயணிக்கின்றன. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் விதமாக உள்ள இந்த முக்கிய சாலைகள் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம்- திருநகர் சாலை மற்றும் மண்டேலா நகர் – விமான நிலையம் வரையிலான சாலை ஆகியவை நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு சாலைகளிலும் ஏற்படும் விபத்துக்களை தடுக்க, சாலை விரிவாக்கம் செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து, பழங்காநத்தம்- திருநகர் சாலையை ரூ.9 கோடி மதிப்பிலும், மண்டேலா நகர் – விமான நிலைய சாலையை ரூ.40 கோடி மதிப்பிலும் விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை திட்ட அறிக்கை தயாரித்தது. இதற்கு நிர்வாக ஒப்புதல் பெறுவதற்காக கோப்புகள், உயரதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிர்வாக அனுமதி கிடைத்தபின் அடுத்த கட்ட பணிகள் துவங்கும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.