செய்யாறு, நவ.15: செய்யாறு அருகே மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். செய்யாறு அடுத்த மாரியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(47), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 12ம்தேதி மாரியநல்லூர் ஏரியில் மீன்பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாரியநல்லூர் ஏரியில் சிலர் மீன் பிடிக்க சென்றவர்கள் ஏரியில் சடலம் மிதப்பதை கண்டனர். இதையறிந்த செல்வராஜ் குடும்பத்தினர் சந்தேகத்துடன் சென்று பார்த்தபோது தண்ணீரில் மிதந்தது செல்வராஜ் என்பது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்ஐ சுந்தரம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், ஏரியில் மீன் பிடிக்க சென்ற செல்வராஜ் வலையில் பிடித்த மீன்களை எடுக்க முயன்றபோது வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.