சிதம்பரம், செப். 4: மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது வலையில் நாட்டு துப்பாக்கி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 12 கட்டிடம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன்கள் மணிகண்டன்(25), ராஜாராமன்(23). இவர்கள் இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பகுதியில், அவின்யூ ஒன்றின் பின்புறம் உள்ள பாலமான் ஓடையில் வலை விரித்து இருவரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் சென்றபிறகு வலையை இழுத்து பார்த்தபோது, வலையில் சுமார் 4 அடி 20 சென்டி மீட்டர் நீளமுள்ள நாட்டு துப்பாக்கி ஒன்று சிக்கியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த நாட்டு துப்பாக்கியை இருவரும் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து, ஓடையில் துப்பாக்கி எப்படி வந்தது, துப்பாக்கி யாருடையது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வலையில் நாட்டு துப்பாக்கி சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.