பாகூர், ஜூன் 14: கிருமாம்பாக்கம் அருகே மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வலைகள் பராமரிப்பதற்காக அரசு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பலர் தங்களது மீன்பிடி வலைகளை வைத்து பராமரித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள பழுதடைந்த சமுதாய நலக்கூடத்தில் தங்களது சுருக்குவலை, இரட்டை வலைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சமுதாய நலக்கூடத்தில் திடீரென தீப்பிடித்து வலைகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்தன.
தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் தீயில் வலைகள் மற்றும் கட்டிடங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர் பஞ்சாயத்தினர் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் மீன்பிடி வலைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டதாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடியும் நிலையில் வலைகள் எரிந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.