மண்டபம்,பிப்.17: மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மீனவர்கள் பயன்பாட்டில் இருந்து சேதமடைந்து வரும் மீன்பிடி இறங்கும் தளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு அருகே டி வடிவமைப்பில் மீன்பிடி இறங்கும் தளம் கட்டப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி இறங்கும் தளம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மீனவர்கள் பயன்பாட்டில் இன்று வரை இருந்து வருகிறது.
இந்த மீன்பிடி இறங்கும் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கயிற்றால் கட்டி பாதுகாப்பாக நிறுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மீன்பிடி இறங்கும் தளம் பழமையானதால் வலுவிழுந்து சைடு சுவர்கள் சேதம் அடைந்து வருகிறது. மேலும் தூண்களில் கான்கீரிட் கம்பிகள் தெரியும் அளவிற்கு கடல் நீரால் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. அதனால் மீன்பிடி இறங்கும் தளத்தை சீரமைப்பதற்கு மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.