ராமநாதபுரம், செப்.8: கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களில் நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் போக, பணி நீக்கம் செய்யப்பட்டோருக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செவிலியர்கள் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பேரிடர் தொற்று ஏற்பட்ட 2020ம் ஆண்டு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டோம். செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று, அதில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் மீதமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மற்றவர்களுக்கும் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பணி வழங்கப்பட வில்லை. எனவே கோவிட் பேரிடர் காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் நிரந்தர தன்மையுடைய ஒப்பந்த செவிலியர் பணி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.