Wednesday, June 18, 2025
Home மருத்துவம்ஆலோசனை மீண்டும் கொரோனா… தேவை விழிப்புணர்வு!

மீண்டும் கொரோனா… தேவை விழிப்புணர்வு!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

கொரோனா என்றாலே நமக்கு உடலும் உள்ளமும் நடுங்குகிறது. ஊரடங்கு, சமூக விலக்கம், பொருளாதார முடக்கம், அன்றாட வாழ்க்கை பாதிப்பு என்று ஒட்டுமொத்த உலகையும் கதிகலங்க வைத்தது ஒரு சின்னஞ் சிறு கிருமி. வாழ்வு குறித்து நவீன மனிதனுக்கு இருந்த எத்தனையோ பிரம்மைகளை உடைத்து, வாழ்வின் நிலையாமை என்னவென உணர்த்தியதும் கொரோனாதான்.

அதன் பிறகு, தடுப்பூசி மற்றும் மந்தை நோயெதிர்ப்பு மூலம் நிலைமை கட்டுக்குள் வந்தாலும் கொரோனாவின் பல்வேறு வேரியண்ட்கள் அவ்வப்போது பரவி பீதியை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் இப்போது இன்னொரு வேரியண்ட் உலகம் முழுதும் கடுமையாகப் பரவிவருகிறது. JN 1 கொரோனா எனும் வேரியண்ட்தான் அது. ஒமிக்கிரானின் புதிய வேரியண்டான இதனைப் பற்றி மேலும் விரிவாகப் பார்ப்போம்.

பல ஆசிய நாடுகளில் கொரோனா-19ன் வேரியண்டான JN 1 பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இருப்பினும், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே கூறப்படுகிறது. சிங்கப்பூரில், 2025 ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான வாரத்தில், 14,200 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், அதற்கு முந்தைய வாரத்தில், 11,100 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கைத் தவிர, கடந்த சில மாதங்களில் சீனாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிப்பதற்கு, கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடு JN.1 தான் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின் படி இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாகவும், அவற்றில் 53 பேர் மும்பையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

JN.1 என்றால் என்ன?

சிங்கப்பூரில் இதுவரை மரபணு வரிசை ஆய்வு செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளில், பெரும்பாலானவை JN.1 மாறுபாட்டைச் சேர்ந்த வைரஸ் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. JN.1 வைரஸ்கள் முற்றிலும் புதியவை அல்ல, நீண்ட காலமாக உலகம் முழுவதும் பரவியிருந்த ஓமிக்ரானின் துணை மாறுபாடாகும்.டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) சமூக மருத்துவத் துறைப் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய், கோவிட் தடுப்பூசியின் (இணை-தடுப்பூசி) சோதனையின் மூன்று கட்டங்களிலும் தலைமை ஆராய்ச்சியாளராக இருந்தவர்.

கொரோனா வைரஸின் இந்தப் புதிய மாறுபாடு குறித்து பிபிசி செய்தியாளர் சந்தன் ஜஜ்வாரே, டாக்டர் சஞ்சய் ராயுடன் பேசினார்.“JN.1 என்பது கொரோனாவின் ஓமிக்ரான் வைரஸின் மாறுபாடுகளின் ஒன்று. இது அடையாளம் காணப்பட்டு ஓராண்டிற்கும் மேலாகிவிட்டது, இதுவொரு புதிய வைரஸ் அல்ல. எனவே இதன் தீவிரத்தன்மை முதல் இந்த வைரஸ் மாறுபாடு தொடர்பான விவரங்கள் அனைத்தும் நமக்குத் தெரியும்” என்று அவர் கூறுகிறார்.

“JN.1 மாறுபாட்டைப் பற்றி பயப்படத் தேவையில்லை. அது பெரிய அளவில் பாதிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. தற்போது நம்மிடம் உள்ள ஆதாரங்களின்படி, சாதாரண சளி ஏற்பட்டால் இருப்பது போலவோ அல்லது அதை விட குறைவாகவோ இந்த ஜேஎன்.1 மாறுபாடு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் கூறுகிறார்.

நிபுணர்களின் அறிவுறுத்தல்கள்

“சாதாரண சளியை ஏற்படுத்துவதும் ஒரு வகை கொரோனா வைரஸ்தான், அதாவது, அதுவும் கொரோனோவின் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆயிரக்கணக்கான கொரோனா வைரஸ் குடும்பங்கள் உள்ளன, ஆனால் ஏழு குடும்பங்கள் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்துபவை, அவற்றில் நான்கு குடும்பங்கள் ஏற்கனவே இருந்தன, அவை சளியுடன் தொடர்புடையவை” என்று டாக்டர் சஞ்சய் ராய் கூறுகிறார்.

2003-04ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து வந்தது SARS-1. MERS (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி) 2012-13 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கிலிருந்து வந்தது. பிறகு, கொரோனா வைரஸ்-2 2019 ஆம் ஆண்டில் வந்தது, இது ஏற்படுத்தும் பாதிப்பையே நாம் கோவிட்-19 நோய் என்று அழைக்கிறோம்.சஞ்சய் ராயின் கூற்றுப்படி, வீட்டில் ஒருவருக்கு ஜலதோஷம் ஏற்பட்டால், அது வீட்டினர் அனைவருக்கும் தொற்றலாம் என்றாலும், அது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது அல்ல. அதேபோலத் தான் கொரோனாவும் சளியின் அளவுக்கே பாதிப்பு
ஏற்படுத்துவதாக மாறிவிட்டது.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின்படி,“தற்போது, சிங்கப்பூரில் பரவும் கோவிட்-19 இன் முக்கிய வகைகள் LF.7 மற்றும் NB.1.8 இரண்டுமே JN.1 இன் துணை வகைகள் ஆகும். இதுவரை மரபணு வரிசை ஆய்வு செய்யப்பட்ட வைரஸ்களில் மூன்றில் இரண்டு பங்கு இவற்றுடன் தொடர்புடையவை. JN.1 தான், தற்போதைய கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.”

முந்தைய வகைகளுடன் ஒப்பிடும்போது இந்த JN.1 வகை வைரஸ் மனிதர்களை கடுமையாக பாதிக்காது என்று கூறும் நிபுணர்கள், ஆனால் இது துரிதமாக பரவுவதுதான் கவலைக்குரிய விஷயம் என்று கூறுகின்றனர்.இருப்பினும், ‘‘சளி மற்றும் காய்ச்சலைப் போலவே, இது ஒரு முறை மட்டும் ஏற்படாது, பல முறை பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கொரோனாவிலும் 10,000 வகைகள் உள்ளன. அதுமட்டுமல்ல, தற்போது அது முற்றிலும் மாறிவிட்டது” என்று டாக்டர் சஞ்சய் ராய் கூறுகிறார்.“கோவிட் காலத்தில் நாங்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பு ஒன்றில், கிட்டத்தட்ட அனைவரிடமும் ஆன்டிபாடிகள் உருவாகியிருப்பதைக் கண்டறிந்தோம், அதாவது கிட்டத்தட்ட அனைவரும் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.

தற்போது கொரோனா பாதித்தவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மும்பையின் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இதைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சர் பிரகாஷ் ஆபிட்கர் தெரிவித்துள்ளார்.தற்போது ஒருவருக்கு சளி, ஜலதோஷம் பாதித்தாலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் என்று சஞ்சய் ராய் கூறுகிறார்.

JN.1 அறிகுறிகள் மற்றும் இந்தியாவின் நிலைமை

தற்போதைய கொரோனா வைரஸின் அறிகுறிகள், ஓமிக்ரானிலிருந்து மிகவும் வேறுபட்டவை அல்ல. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டை புண், சோர்வு, தலைவலி மற்றும் இருமல் போன்றவை ஏற்படும், இவையே புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஆகும்.இருப்பினும், ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அறிகுறிகள் வெளிப்படும். JN.1 வகை கொரோனாவின் முக்கிய அறிகுறிகளில் வயிற்றுப்போக்கு அல்லது தலைவலி ஆகியவை அடங்கும்.

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்தியாவில் திங்களன்று ஒரு உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், அவசர மருத்துவ நிவாரணப் பிரிவு, பேரிடர் மேலாண்மைப் பிரிவு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? மக்களுக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா?

“இந்தியாவில் கொரோனா-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கருத்துடன் கூட்டம் முடிந்தது. 2025 மே 19 நிலவரப்படி, இந்தியாவில் 257 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு அவதானிக்கும்போது, இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

தொகுப்பு: சரஸ்

கொரோனா JN 1 பாதிப்பிலிருந்து தப்பிக்க…

*பொது இடங்களில் இயன்றவரை கும்பலாகக் கூடுவதைத் தவிர்க்கலாம்.

*பொதுவெளியில் அல்லது நெரிசலான இடங்களில் புழங்கும்போது மெடிக்கல் அணிந்து செல்வது நல்லது.

*வீட்டுக்கு வந்தவுடன் கைகளை, நன்றாக சுத்தமாகக் கழுவ வேண்டும்,

*வீட்டில் யாருக்கேனும் சளிக் காய்ச்சல் இருந்தால் இயன்றவரை அவரை தனியாக வைத்துப் பராமரிப்பது நல்லது.

*தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் அழைத்துச் சென்று தடுப்பூசி போடலாம்.

*பூஸ்டர் தடுப்பூசிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி அவசியம் எனில் போடலாம்.

*சமூக இடைவெளி எப்போதுமே நல்லதுதான். கொரோனா தற்போது பயப்படும் நிலையில் இல்லை என்றாலும் நாட்பட்ட நோய்வாய்ப்பட்டோர், நுரையீரல் பலவீனமுடையோரை கடுமையாகப் பாதிக்கும். அதனால் இயன்றவரை அனைவரும் பாதுகாப்பாக இருப்பதே நல்லது.

*சளிக், காய்ச்சல் இருந்தால் கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம் போன்றவற்றைப் பருகலாம்.

*இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அவசியம் மருத்துவரைப் போய் பார்த்து தேவையான சிகிச்சை பெறுவது அவசியம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi