பொன்னேரி, அக்.20: மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் வாலிபரின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய ராமாரெட்டி பாளையம் ஏரிக்கரை பகுதியில் பாழடைந்த கிணறு உள்ளது. இங்கு துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாகச் சென்ற சிலர் மீஞ்சூர் போலீசுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், அந்த பாழடைந்த கிணற்றில் ஒரு வாலிபரின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, பேரூராட்சி ஊழியர்கள் மூலம் சடலத்தை மீட்டனர். இறந்த வாலிபர் தலையில் வெட்டப்பட்ட நிலையிலும், கை கால்கள் துணியால் கட்டப்பட்டும் கிடந்துள்ளார். போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் 2வது தெருவை சேர்ந்த அஜித் (25) என தெரியவந்தது. அஜித்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
கடந்த 16ம் தேதி இரவு அஜித் நண்பர்களான ராமா ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (21), வசந்தகுமார் (23), லால்பகதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த கார்த்திக் (18), சூர்யா நகர் ஏரிக்கரையைச் சேர்ந்த மோகன் (21), சாய் (22), கணேஷ் (25) ஆகிய 6 பேருடன் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் அஜித் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, ஏற்பட்ட தகராறில் 6 பேரும் சேர்ந்து அஜித்தை சரமாரியாக தலையில் வெட்டி துணியால் கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர். மேலும், அஜித் உயிருடன் இருக்கும்போதே இந்த 6 பேரும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து, ராமாபுரம் ஏரிக்கரை பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றனர். கிணற்றில் வீசிய பிறகுதான் அஜித்தின் உயிர் பிரிந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், உதவி ஆணையர் ராஜா ராபர்ட், ஆய்வாளர்கள் காளிராஜ், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அஜித்தின் நண்பர்களான நாகராஜ், கார்த்திக், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் சம்பவம் நடந்த அன்றே கைது செய்தனர். மேலும், இதில் தலைமறைவாக இருந்த மோகன், சாய், கணேஷ் ஆகிய 3 நபர்களையும் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அஜித்தை கொலை செய்த 6 பேர் மீதும் மீஞ்சூர், மணலி, பொன்னேரி, கொருக்குப்பேட்டை, கவரப்பேட்டை, கொரட்டூர், மதுரவாயல் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த, 4 ஆண்டுகளாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் பழைய திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறால் அஜித்தை கொன்றனரா அல்லது கள்ளக்காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.