நிலக்கோட்டை, நவ. 14: செம்பட்டி அருகே பழைய செம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (34). எலெக்ட்ரிஷியன். இவரது மனைவி முருகேஸ்வரி (30). இருவரும் மகளிர் சுய உதவிக்குழு பணத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இவர்களை ஒருதரப்பினர் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குணசேகரன் கடந்த நவ.8ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து முருகேஸ்வரி செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகேஸ்வரி மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு செம்பட்டி காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.