போடி, ஜூன் 11: மின் விபத்துகளில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை, வெள்ளம், இடி, மின்னல் ஆகிய இயற்கை இடர்பாடுகளின்போது ஏற்படும் மின் விபத்துக்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு வீடுகளிலும் சுற்றுப்புறத்திலும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. விளம்பர பலகைகளைக் கட்டக்கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக்கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதைக் குறித்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தகவல் தெரிவிப்பதுடன் மின் ஊழியர்கள் வரும்வரை காத்திருந்து வேறு நபர்கள் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மின்னல் ஏற்படும் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ மின்கம்பங்கள் மின்கம்பிகள் அருகிலோ தஞ்சம் அடையக்கூடாது. பாதுகாப்பான கான்கீரிட் கட்டிடங்களில் மட்டுமே தஞ்சம் அடையலாம்,மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. பொதுமக்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தி மின்கசிவு, மின்விபத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.மின் கசிவுகளை கண்டறிந்து உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி விபத்துக்களை தடுக்க உதவும் கருவியான ஈஎல்சிபி.யை வீடு, கடை, கோவில் மற்றும் பள்ளிகளில் பொருத்த வேண்டும். மின்சார கம்பத்தில் கொடிகட்டி துணி காய வைப்பது கூடாது.
ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். டிப்பர் லாரி மற்றும் கனரக வாகனங்களை உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளின் அருகில் மற்றும் அடியில் நிறுத்தி வைக்கக் கூடாது. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். மின்மாற்றியிலோ அல்லது மின்கம்பங்களிலோ மின்வாரிய பணியாளர் தவிர வேறு யாரும் ஏற அனுமதி இல்லை.
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை கட்டும் போதும் அலங்கார பந்தல் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் போதும் போதுமான இடைவெளி விடுவதை உறுதி செய்ய வேண்டும். மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்சார வாரியத்தை அணுக வேண்டும். விவசாய நிலங்களில் மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு அமைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேற்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மின் விபத்துக்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.