உளுந்தூர்பேட்டை, செப். 4: உளுந்தூர்பேட்டை அருகே மின்வாரிய அலுவலகத்தில் இளைஞர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் தக்கா பகுதி உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று முன்தினம் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒலையனூர், ஆர்.ஆர்.குப்பம், குணமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சார தடை ஏற்பட்டது. இதையடுத்து பழுதினை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து மின் பழுதை விரைந்து சரி செய்து மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என கூறி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஊழியர்கள் பழுதை சரி செய்து மின்சாரம் வழங்கினர். இதனால் சிறிது நேரம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.