திருப்பரங்குன்றம், நவ. 8: திருநகரில் மின்வாரிய அலுவலகம் முன்பு மனைவி, மகன்களுடன் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்தவர் உதயகுமார். மனைவி ராஜபிரியா. கட்டிட தொழிலாளர்கள். 2 மகன்கள் உள்ளனர். உதயகுமாரின் வீட்டு மின்கட்டணம் கடந்த முறை அதிகமாக வந்துள்ளது. இந்த கட்டணத்தை கட்டியுள்ளார். இதுகுறித்து இந்த முறை ரீடிங் எடுக்க வந்த பணியாளருடன் உதயகுமார் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மின்வாரிய ஊழியர் ரீடிங் எடுக்காமல் சென்றுள்ளார்.
மின்கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து உதயகுமார் தனது மனைவி மற்றும் மகன்களோடு திருநகர் மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்தவர்கள், கடந்த முறை செலுத்திய அதே கட்டணத்தை செலுத்தும்படி கூறினர். அதிக தொகை என்பதால் உதயகுமார் செலுத்த மறுத்தார். இதையடுத்து பணியில் இருந்தவர்கள், உதயகுமாரை அவதூறாக திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த உதயகுமார் குடும்பத்தினருடன் மின்வாரிய அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அவர்களை காப்பாற்றினர். திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட தொழிலாளி குடும்பத்துடன் மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.