திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, திருவாரூர் மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தின் பாதுகாப்பு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெங்களுரூ பாரத் மின்னணு நிறுவனத்தின் பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்க்கும் பணி தினந்தோறும் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது. இப்பணி உத்தேசமாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே இப்பணி முடிவடையும் நாள் வரை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் ஒரு பிரதிநிதி கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.