ஆண்டிபட்டி, ஜூன் 3: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று காலாண்டு தணிக்கை செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் காலாண்டுக்கு ஒரு முறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காலாண்டு தணிக்கை செய்தார்கள். இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.