திருச்சி, ஆக.21: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சி மாநகர் சார்பில் நேற்று மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க வட்ட செயலாளர் பழனியாண்டி, வட்ட பொருளாளர் இருதயராஜ், வட்ட துணை தலைவர் செல்வராஜ், கோட்ட செயலாளர்கள் ராதா, நாகராஜ், ரியாசுதீன், ரவிச்சந்திரன், செல்வம், மணிகண்டன், சிஐடியு புறநகர் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.