தாம்பரம், நவ.19: கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி, கிண்டியில் இருந்து மின்சார ரயிலில், முதல் வகுப்பு பெட்டியில் பெருங்களத்தூர் நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த பெட்டியில் இவரது எதிர் இருக்கையில் ஆண் ஒருவர் மட்டும் பயணித்துள்ளார். அவர், இந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை அந்த இளம்பெண் கண்டித்துள்ளார். அப்போது, அந்த நபர் திடீரென தனது அந்தரங்க உறுப்பை இளம்பெண்ணிடம் காண்பித்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அந்த நபரின் செயலை தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த நபர், ‘‘நான் போலீஸ். என்னிடமே தகராறு செய்கிறாயா, உன்னை பாலியல் வழக்கில் சிக்க வைத்து விடுவேன்,’’ என மிரட்டியுள்ளார். பின்னர், பல்லாவரம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண், தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில், வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், விசாரணை நடத்தியதில், அந்த நபர் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் (33) என்பதும், 2016ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த அவர், தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராக வேலை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கருணாகரனை கைது செய்த தாம்பரம் ரயில்வே போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், மிரட்டல் விடுத்தது, ரயில்வே பாதுகாப்பு விதிமுறை மீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.