வானூர், ஆக. 18: வானூர் தாலுகா காட்ரம்பாக்கம் கிராமத்தில் நேற்று காலை சாலையோரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சீரமைத்து மீண்டும் நடும் போது மேலே சென்ற மின் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் கொடிக்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (28), மோகன் (30), அமர்நாத் (29), அஸ்வின் (28) ஆகியோர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்த அதே பகுதியை சேர்ந்த காந்தாமணி என்பவர் இவர்களை காப்பாற்ற ஓடி வந்து அவர்களை தொட்டதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே மயக்க நிலையில் கிடந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.