கெங்கவல்லி, ஜூன் 23:வீரகனூர் அருகே வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சின்னசாமி. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில், 3 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அவரது விவசாய தோட்டத்தின் அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து, மின்கம்பி அறுந்து மக்காசோள தோட்டத்தில் விழுந்து தீப்பிடித்தது.
இதை பார்த்த சின்னசாமி கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் (பொ) செல்லப் பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காசோள பயிர் முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து, வீரகனூர் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை சீர்செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கினர்.