கடலூர், ஆக. 1: மின்கம்பத்தை சரி செய்ய லஞ்சம் கேட்ட மேற்பார்வையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் திருவந்திபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் லோகநாதன்.(54) இவர் கடந்த 2010ம் ஆண்டு, தனது நிலத்தில் விவசாய மின் மோட்டார் இணைப்புக்கு உண்டான, மின் கம்பம் பழுதடைந்ததை அடுத்து அதனை சரி செய்யக்கோரி, பாதிரிக்குப்பம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அங்கு மேற்பார்வையாளராக பணிபுரிந்த தீனதயாளன், என்பவர் மின் கம்பத்தை சரி செய்ய ரூ.800 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகநாதன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் லோகநாதன், தீனதயாளனிடம் ரூ.800 லஞ்சம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி பிரபாகரன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் தீனதயாளன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பால ரேவதி ஆஜராகி வாதாடினார்.