மதுரை, ஜூன் 11: மதுரை மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வந்து ெமாத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் வியாபாரிகள் விற்று வருகின்றனர். தினமும் 7ஆயிரம் பேர் வரை இங்கு வந்து செல்கின்றனர். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் விஷ்ணுவரதன் என்பவர் வைத்திருந்த தேங்காய் கடையில் நேற்று திடீரென தீப்பற்றியது. அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் தீயில் எரிந்து கருகின.
இது குறித்து தகவலறிந்து தல்லாகுளம் தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் வெங்ககடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.