போச்சம்பள்ளி, ஜூலை 7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் விலை வீழ்ச்சியால், போச்சம்பள்ளி அடுத்த சந்தூரில் 5 லட்சம் மாஞ்செடிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனை தோட்டக்கலை துறை மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மா உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் வகித்து வருகிறது. அதே போல, மாங்கன்றுகளை உற்பத்தி செய்வதிலும் கிருஷ்ணகிரி மாவட்டம், முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது. மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், வேலம்பட்டி, சந்தூர், போச்சம்பள்ளி, மத்தூர் வெப்பாலம்பட்டி, மங்கலப்பட்டி, தொகரப்பள்ளி, பர்கூர், ஜெகதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அல்போன்ஸா, பீத்தர், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உள்ளிட்ட சுவை மிகுந்த மாங்கனிகள் சாகுபடி செய்யப்படுகிறது. மா சாகுபடி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகவும், 2 லட்சம் குடும்பத்தினர் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.
போச்சம்பள்ளி, சந்தூர், வேலம்பட்டி, பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தரமான மாஞ்செடிகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். சந்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மா நர்சரி கார்டன்கள் உள்ளது. இங்கு ஜம்பு நாவல், மற்றும் காட்டு நெல்லி, வீரிய ஓட்டுரக புளிய மர கன்றுகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் மாங்கன்றுகள் உற்பத்தியில் சந்தூர் பகுதி பிரதான இடத்தை பிடித்துள்ளது.
இங்குள்ள நர்சரி கார்டன்களில் பெங்களூரா, அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, இமாம்பசந்த் உள்ளிட்ட பல்வேறு ரக மாங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் திண்டுகல், பழனி, ஒட்டன்சந்திரன், திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தினசரி போச்சம்பள்ளி சந்தூர் பகுதிக்கு வந்து மாஞ்செடிகளை வாங்கி செல்கின்றனர். இதே போல் கேரளா, மற்றும் மாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளும், விவசாயிகளும், மா செடிகளை வாங்கி செல்கிறார்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாஞ்செடிகள் விற்பனையாகமல், தேக்கம் அடைந்து உள்ளது. இதில் தற்போது 4 லட்சம் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளது. இதனை தவிர்க்க அரசு தோட்டக்கலைதுறை மூலம் மா செடிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சந்தூர் பகுதியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் பழனி கூறுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு மா விலை குறைவால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஏக்கர் கணக்கில் மாமரங்களை மா விவசாயிகள் வெட்டி வருகிறார்கள். சந்தூர் பகுதிகளில் உள்ள நர்சரிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் மாஞ்செடிகள், விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. மாஞ்செடிகள் விலையும் பாதியாக குறைந்துள்ளது,’ என்றார்.
காமராஜ் என்பவர் கூறுகையில், ‘சந்தூர் பகுதியில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்த நிலையில், இந்தாண்டு மாங்காய் வரலாறு காணாத அளவிற்கு விலை குறைந்ததால், மா விவசாயிகள் மாந்தோட்டங்களை அழித்து மாற்று பயிருக்கு மாறி வருகிறார்கள். இதனால், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மாஞ்செடிகள் வாங்க யாரும் முன் வராததால், 4 லட்சம் மாஞ்சடிகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே, அரசு தோட்டக்கலைத்துறையின் மூலம் மாஞ்செடிகளை கொள்முதல் செய்ய முன் வரவேண்டும்,’ என்றார்.