திண்டுக்கல், ஆக. 5: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டிற்கான மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. தற்போது 68 மாணவிகள் பயின்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று, தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு வகையான விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றுள்ளனர்.
இதில் தேசிய அளவில் தடகள போட்டியில் 17 வீராங்கனைகளும், கால்பந்து போட்டியில் 6 வீராங்கனைகளும் என மொத்தம் 23 வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் தடகளத்தில் 2 வெள்ளிப் பதக்கமும், கால்பந்து போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர். அதேபோல், மாநில அளவிலான போட்டிகளில் மொத்தம் 337 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 360 வீராங்கனைகள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளனர். . இவ்வாறு தெரிவித்தார்.