மயிலாடுதுறை, செப்.5: மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கைவினை கலைஞர்கள் கைவண்ணத்தில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 395 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7ம் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து நீர்நிலைகளில் கரைக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, அரும்பாக்கம், மூங்கில்தோட்டம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுப்படி கடல், ஆறு, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளில் விநாயகரை கரைக்கும் போது பொதுமக்களுக்கும் மற்றும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாதவாறு எளிதில் கரையக்கூடிய காகிதக்கூழ், மரவள்ளி கிழங்கு கூழ், சுண்ணாம்பு பவுடர், தேங்காய் நார், சவுக்கு, மூங்கில் குச்சிகளை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய வகையில் கற்பக விநாயகர், எலி விநாயகர், லிங்க விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் ஒரு அடி முதல் 10, அடி வரை விநாயகர் சிலைகளை உருவாக்கி வாட்டர் கலர் மூலம் பல்வேறு வர்ணம் தீட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.