திருச்சி, மே 13: திருச்சி மாவட்ட நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு மே மாதம் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (திங்கட்கிழமை) ‘‘அறிவியலும், வாழ்வியலும்” என்ற தலைப்பில் மேக் நாட் அறிவியல் மன்ற நிர்வாகிகள் நர்மதா மற்றும் வசந்தன் குழந்தைகளிடம் நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயல்களிலும் அறிவியிலின் பங்களிப்பு எவ்வாறு பயன்படுத்தி வருகின்றோம் என்பதனை பரிசோதனைகளுடன் செய்து காட்டினார்.
மேலும், ‘‘அறிவியலின் உருவம்” என்ற தலைப்பில் எழில்வேனில் சிறப்பாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் தனலெட்சுமி, நூலகர் ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இன்று ‘‘விண்ணியல் அறிவோம்’’ நிகழ்ச்சியினை மனோகர் நடத்த உள்ளார். நாளை (14 ம் தேதி) ”நாட்டுப்புறக்கலைகள்” மற்றும் “மொழிப்பயிற்சி” யினை பன்முகக்கலைஞர் லால்குடி முருகானந்தம் மற்றும் மங்களமேரி வழங்குகிறார். அனைத்து கோடை கால நிகழ்வுகளிலும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.