கரூர், ஆக.13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காளியப்பனூர்மேடு பகுதியில் சாக்கடை வடிகால் கட்டும் பணியை தாழ்வாக அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாவட்டம் வெங்ககல்பட்டி பகுதியில் இருந்து சுங்ககேட் பகுதி வரை சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காளியப்பனூர் மேடு பகுதியின் ஒரு புறம் நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி மேடாக உள்ளதால், தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த பகுதியில் சாக்கடை வடிகாலை தற்போது உள்ள ஆழத்தை விட மேலும் தாழ்வாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து துறை அதிகாரிகளிடம் இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த பிரச்னை குறித்து பேசி முடிவு செய்வதாக அதிகாரிகள் கூறினர்.