தேனி, நவ. 29: தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு மற்றும் தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வக்கீல் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார் . மாநில துணைத்தலைவர்கள் வடிவேலன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஓசூர் வக்கீல் கண்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வக்கீல் சங்க செயலாளர் பழனிவேலை தாக்கிய உளுந்தூர்பேட்டை போலீஸ் ஸ்ரீராம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இப் போராட்டம் நடத்திய ஆறு வக்கீல்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும், வக்கீல்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் ஜெயபாரதி, சிவக்குமார், பாண்டி மணி, ஹரிஹரசுதன், மலைமுருகன், அருள்தவசி, சிராஜூதீன் ஜோதிசொரூபன், கலையரசன், மகாராஜா, தாமரைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.