நாமக்கல், ஏப்.21: நாமக்கல் மாவட்டத்தில், காவல்துறை சார்பில் 31 இடங்களில் போக்சோ சட்டம் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 1500 மாணவியர் கலந்து கொண்டனர். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க, போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பள்ளி- கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் சிறிய குழந்தைகள் அதிகமாக பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த சட்டம் குறித்து காவல்துறை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியருக்கு, மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் போலீசார் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 27 காவல்நிலையங்கள் மற்றும் 4 மகளிர் காவல்நிலையங்கள் சார்பில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று 31 இடங்களில் நடைபெற்றது. காவல்நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள மகளிர் பள்ளிகள், பொது இடங்களில் இந்த நிகழ்ச்சியை காவல்துறையினர் நடத்தினர்.
அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.,க்கள், மகளிர் போலீசார் கலந்து கொண்டு, மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்து விளக்கினர். மேலும், இது தொடர்பான புகார்கள் இருந்தால் தைரியமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தவறு செய்த நபருக்கு போக்சோ சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என போலீசார் விளக்கினர். மேலும், குழந்தைத்திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவியரிடம் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 1500க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்சோ சட்டம் தொடர்பாக மாணவிகள் மத்தியில், தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் மாணவியர் தங்களின் பெற்றோர், அல்லது ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் போலீசில் புகார் செய்தால் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்,’ என்றனர்.