ஏற்காடு, நவ.27: 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மூன்றாண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஏற்காடு தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு அலுவல்களுக்காக தாலுகா அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஓமலூர்: ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தாசில்தார் ரவிக்குமார் தலைமையில் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகம் முன் அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேட்டூர்: மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மூன்றாம் கட்ட பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. வட்ட கிளை தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் ரமேஷ், அரசு ஊழியர்கள் சங்க வட்ட செயலாளர் சிங்கராயன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் பங்கேற்று கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகா வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் சிவராஜ் தலைமை வகித்து பேசினார். வட்டத் தலைவர் மணிகண்டன், செயலாளர் சத்யராஜ், பொருளாளர் கதிர்வேலு, துணை தலைவர் கீதா, துணை செயலாளர் தங்கபாலு முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் ஆர்.ஐ.க்கள் 25 பேர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
சங்ககிரி: சங்ககிரி தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சாஜிதா பேகம், மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் பேசினார்.
கெங்கவல்லி: கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டது. பல்வேறு அலுவல்களுக்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.