ஊட்டி,நவ.22: ஊட்டி,குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மேக மூட்டம் மற்றும் சாரல் மழையால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் துவங்கினாலே பனியின் தாக்கம் இருக்கும்.இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதுபோன்ற சமயங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் காணப்படும். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்வது வழக்கம். ஆனால், பகல் நேரங்களில் வானம் தெளிவாக இருக்கும். மீண்டும் மாலையில் பனி மூட்டம் காணப்படும்.
இது போன்ற சமயங்களில் கடும் குளிர் நிலவும். ஆனால், இம்முறை கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சில நாட்கள் மழை குறைந்து நீர்பனி காணப்பட்டது.அதே சமயம் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால், நேற்று மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. ஊட்டியில் மேக மூட்டம் காணப்பட்டது. குன்னூர் பகுதியில் லேசான மழை பெய்தது.தற்போது ஊட்டியில் குளிர் அதிகரித்துள்ளது.குளிரால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த மாறுபட்ட காலநிலையால்,பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாய பயிர்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும்,அதிகாலையில் பனி மூட்டம் அல்லது மேக மூட்டம் காணப்படுவதால்,வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்தும்,வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் இந்த மேக மூட்டத்திற்கிடையே வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.